திங்கள், 9 டிசம்பர், 2013

திரிந்தது தெரிந்தது 1: அக்கு வேறு ஆணி வேறு

பின்னணி:
சில தமிழ்ச் சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் விளக்கமோ, மூலமோ
சரியாகக் கிடைப்பதில்லை.    என் சிந்தனையில் இந்த மாதிரி சில
சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் இப்படி (சற்று மாறான, புதிய) விளக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது.  அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
உதாரணங்கள்:

1) சில சொற்கள்/சொற்றொடர்கள்:
அக்கு வேறு, ஆணி வேறு
கொள்ளுத் தாத்தா/பாட்டி/ பெயரன்/பெயர்த்தி (பேத்தி)
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது
தேரை ஓடின காய்

2) பழமொழிகள்:
அதிகப் படித்த மூஞ்சூறு காடிப்பானையில் விழுந்ததாம்.

அக்கு வேறு, ஆணி வேறு 
சுருக்கமாக:

நாம் மிகச் சாதாரணமாக “அக்கு வேறு ஆணி வேறாகப்” பிரித்து விட்டார் என்று சொல்கிறோம்.  இந்தப் பயன்பாட்டிற்கு வலைத்தளங்களில் சில விளக்கங்கள் இருக்கின்றன.  என் சிந்தனையில், அச்சு வேறு, ஆணி வேறாக”
(ஒரு கடிகாரம், மிதி வண்டி போன்ற) இயந்திரப் பொறிகளைப் பல பாகங்களாக, முக்கியமாக சக்கரங்களின் அச்சாணிகளை, அச்சு வேறு, ஆணி வேறாகப் பிரித்துப்போடுவது என்பது, பேச்சு வழக்கில் “அக்கு வேறு, ஆணி வேறாக”ப் பிரிப்பது என்றாகி விட்டது எனத் தோன்றுகிறது.  கோயம்புத்தூர் வட்டார வழக்கில் அச்சு வேறு, ஆணி வேறாகப் பிரிப்பது என்ற வழக்கு இருப்பதாகவும் அறிகிறேன்.

விரிவாக:

என் சிந்தனையில் தோன்றியதற்கு, பக்க பலமான ஆதாரங்களை, விவரமாகக்
கீழே கொடுத்திருக்கிறேன்.

நாம் மிகச் சாதாரணமாக “அக்கு வேறு ஆணி வேறாகப்” பிரித்து விட்டார் என்று சொல்கிறோம்.  பொதுவாக, இயந்திர சாதனங்களைப் பழுது பார்ப்பவர் அல்லது முற்றிலும் புதுப்பிப்பவர் செய்வதுதான் இவ்வாறு கூறப்படும்.  இலக்கிய விமர்சனம் போன்றவற்றிலும் இச் சொல் வழக்கு பயன் படுத்தப் படுவதைக் காணலாம்.

இந்தச் சொல் வழக்கிற்கான என்னுடைய விளக்கம் சொல்லு முன், முன்னதாக ஏதேனும் விளக்கம் இருக்கிறதா, அகரமுதலியில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்று தேடினேன்.

 அகரமுதலியில் அக்கு என்ற சொல்லிற்கும், ஆணி என்பதற்கும் பொருட்கள் கீழே பார்க்கலாம்:
http://www.tamilvu.org/library/dicIndex.htm
சொல்
அருஞ்சொற்பொருள்
அக்கு எலும்பு ; சங்குமணி ; எருதின் திமில் ; பலகறை ; கண் ; உருத்திராக்கம் ; உரிமை ; எட்டிமரம் .

தமிழ் தமிழ் அகரமுதலி

Searched word ஆணி

இரும்பாணி; அச்சாணி; எழுத்தாணி; மரவாணி; உரையாணி; புண்ணாணி; மேன்மை; ஆதாரம்; ஆசை; சயனம்; பேரழகு; எல்லை.

இங்கு ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

பிறகு வலைத்தளங்களில் தேடிய பொழுது, இலவசக் கொத்தனாரின் இடுகை
ஒன்றில்தான் விவரமாகப் பேசப்பட்டிருந்தது.  முழு விவரமும் இந்தச் சுட்டியில் பார்க்கலாம்:    http://www.tamilpaper.net/?p=1598
 அந்த இடுகையிலிருந்து, தேவையான ஒரு பகுதி:

இதற்கான விடை நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் கிடைத்தது.  குறிப்பாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி
கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே. 

இந்தப் பாடலின் இரண்டாம் வரியில் கயிற்றும் அக்காணி கழித்து அப்படின்னு பாடி இருக்காரு. இதற்கான உரையில் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். எலும்பில் இருந்து மொத்தமாக தசைகளை நீக்கும் ஆற்றல் பெற்றவனாய் ஆண்டவனைச் சொல்கிறார். அதாவது ஆதாரம் என்ற பொருட்படும் விதமாக ஆணி என்றால் தசை, எலும்புகளை ஒரு அமைப்பில் நிறுத்தச் செய்யவும் அவற்றை இயக்கவும் தேவைப்படும் தசைகள் என்று சொல்லி இருக்கிறார்.

 இந்த வழி சென்று, அக்காணியை அக்கு+ஆணி எனப் பிரித்து, ஒரு ஆழ்ந்த தத்துவப் பொருள் கொடுத்திருக்கிறார்.

அகராதியில் அக்காணி என்றால் என்ன என்று தேடினால் கிடைப்பது:

(Source: http://glosbe.com/ta/en/)

அக்காணி

Translations into English: Gross, material body 

Tamil-lexicon 

ஸ்தூல சரீரம்

சொல்
அருஞ்சொற்பொருள்
அக்காணி பருவுடல் .

 (Source: http://www.tamilvu.org/library/dicIndex.htm)

மேற்கூறிய திவ்யப்ரபந்தத்தில் வரும் அக்காணி என்ற சொல்லை, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்காமலே, 
“பருவுடல்/ஸ்தூல சரீரம் கழித்து”  
(சூக்கும உடல் கொண்டு) என்று பொருள் கொள்ளலாமே!

********************
அப்படியும் இருக்கலாம் ... இப்படியும் இருக்கலாமோ?

தமிழில் “ச்ச” அல்லது “ட்ச” என்று வடமொழியில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு இணையான சொற்களில், ”க்க” என்று வருவதுண்டு.

உதாரணமாக சில:

அக்கம் (p. 2) [ akkam ] {*}, s. terrestrial latitude, பூகோ ளாட்சம்; 2. metal, gold, money, பொன்; 3. கண், eye (http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D&table=fabricius)

அக்கணம் (p. 2) [ akkaṇam ] , அச்சணம், s. (அ dem.) that moment.  (http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D&table=fabricius)

 அக்கரம் (p. 2) [ akkaram ] {*}, அச்சரம், அட்சரம், அக்ஷரம் s. a letter of the alphabet, எழுத்து; 2. a disease of the stomach, thrush.
University of Madras Lexicon

இலச்(ட்)சுமணன்  ==> இலக்குவன்
இலச்(ட்)சணம் ==> இலக்கணம்
இராச் (ட்) சசன் ==> இராக்கதன்
உருத்திராச்சம்  ==> உருத்திராக்கம்
பிய்த்தல் பிடுங்கல் ==> பிச்சல் பிடுங்கல் ==> பிக்கல் பிடுங்கல்

இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிப்போம்:

அச்சாணி (கடையாணி) என்ற சொல்லை “அச்சு”+ “ஆணி” என்று பிரிக்கலாம்.
அச்சாணி கடையாணி , ஊர்திகளின் இருசில் சக்கரம் கழலாமல் செருகப்படும் ஆணி .

அச்சு என்றால் என்ன?
தமிழ் அகரமுதலியிலிருந்து:
சொல்
அருஞ்சொற்பொருள்
அச்சு அடையாளம் ; உயிரெழுத்து ; வண்டியச்சு ; எந்திரவச்சு ; கட்டளைக்கருவி ; உடம்பு ; வலிமை ; அச்சம் ; துன்பம்


Axle n. இருசு, சக்கரத்தின் அச்சு. (http://www.dictionary.tamilkalanjiyam.com)

இவையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கையில், 
அச்சு வேறு,  ஆணி வேறாகப்   
பிரிப்பதுதான்
பேச்சு வழக்கில்  “அக்கு வேறு, ஆணி வேறு”
என்று மருவி வந்திருக்கும்  
எனத் தோன்றுகிறது.Muthu'sAmazonHealth

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்